வ.உ.சி. சிலை அமைக்க தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் ம.பொ.சி.யின் போராட்டம்

பிராம்மணர்-பிராம்மணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசல். விடுதலைப் பாசறையையே பிளவுபடுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சி.யைப் போன்ற பிராம்மண ரல்லாத தேச பக்தர்களுக்கு இருந்தது. அதனால், நீதிக் கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி. அதனை ஆதரித்தார். இதனாற்றான், அன்று தமிழ்நாடு காங்கிரசில் முன்னணி யிலிருந்த பெருந்தலைவர்கள் வ.உ.சி.யை வகுப்புவாதியாகக் கருதும் நிலைமை ஏற்பட்டது. தேசத் துரோகி என்றுகூட வருணித்துப் பிரச்சாரம் செய்தனர்.

இதனை, வ.உ.சி.யின் வாக்கைக் கொண்டே அறிய முயல்வோம்:

“தேச அரசாட்சியை மீட்பதற்காகத் தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமான மில்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே” என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும், ‘ராஜாங்கத் தாரிடம் கைக் கூலி பெற்று தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை’ என்று பொருள் படும்படி எழுதிய ஒரு பத்திரிகாசிரியர் புன்மொழியும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அழிவதும் இல்லை. “விளக்குப் புகவிருள்சென்றாங்கு ஒருவன் தவத்தின்முன் நில்லாதம் பாவம்” என்றபடி, தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோக இருள் நில்லாது, இவ் வுண்மையினை அவர் அறிவாராக. (வ.உ.சி. யின் ‘எனது அரசியல் பெருஞ் சொல்’
என்னும் நூலிலிருந்து)

வ.உ.சிதம்பரனார், தேசபக்தியைச் சந்தேகித்தனர் அந்நாளைய காங்கிரஸ்காரர்கள். 1939ஆம் ஆண்டில் வ.உ.சி. சிலை நிறுவுவதற்கு நான் செயலாளனாக இருந்த சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவு தரும் தீர்மானம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டு விட்ட தென்றாலும், அக்கமிட்டியின் தலைவர் எஸ். சத்திய மூர்த்தி, காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்து விட்டார். அவர் அப்படி மறுத்தது முறையல்லவென்றாலும், அவரோடு போர் நடத்தி, வகுப்புவாதப் பூசலை வளர்த்து விட நான் விரும்பவில்லை. அதனால், பொதுமக்களிடம் பொருளுதவி பெறுவதென்றே முடிவுக்கு வந்தேன். சென்னை டிராம்வே தொழிலாளர் சங்கம், என் தலைமையில் இயங்கி வந்த முதல் சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி, இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றிடமிருந்தும், இன்னும் பல நிறுவனங் களிடமிருந்தும் பொருளுதவி பெற்றேன். சென்னை ஆமில்டன் வாராவதி அருகிலுள்ள விறகு தொட்டிக் கடைக்காரர்களிடமும் பொருள் திரட்டினேன். என்ன திரட்டினாலும், வ.உ.சி.யின் முழு உருவச் சிலை செய்வதற்குத் தேவைப்படும் அளவுக்குப் பொருள் கிடைக்கவில்லை. அதனால், முக உருவச்சிலை மட்டும் நிறுத்துவதென்றே முடிவுக்கு வந்தேன். சென்னை பக்கிங்காம்-கர்னாடிக் ஆலைத் தொழிலாளர் தலைவரும் காங்கிரஸ்காரருமான பெரம்பூர் திரு. எஸ். பக்கிரிசாமிப்பிள்ளை, குறைந்த விலைக்கு வ.உ.சி.யின் முக உருவச் சிலையைத் தயாரித்துத் தர முன் வந்தார். சிலையை காங்கிரஸ் மாளிகையின் முன்புள்ள கொடி மரத்துக்கு அருகே வைக்க வேண்டு மென்பது என் விருப்பம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு அனுமதி தரவில்லை. சிலை வைப்பதற்கு வேறு இடத்தையேனும் தேர்ந் தெடுத்துக் கூறுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு எழுதினேன். அதற்குப் பதிலே கிடைக்கவில்லை. சிலைத்திறப்பு விழாவுக்குத் தேதியை நிச்சயித்துவிட்டேன். காங்கிரஸ் மாபெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சேலம் திரு. சி. விஜயராகவாச் சாரியாரை நேரில் சந்தித்து சிலையைத் திறந்து வைக்க அவரது இசைவைப் பெற்றுவிட்டேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரசின் அனுமதி கிடைக்காததால், குறித்த தேதியில் சிலைத்திறப்பு விழா நடத்துவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு காங்கிரசின் மீது சினங் கொண்டவனாகி, அதன் அனுமதிக்காகக் காத்திராமல், சிலைத் திறப்பு விழாவை நடத்தத் துணிந்தேன்.

ஐயரின் ஆத்திரம்:

திரு. எஸ். சத்தியமூர்த்தி ஐயரவர்கள், சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தா ராதலால், விழாவுக்கு அவரே தலைமை வகிக்க வேண்டு மென்று நான் விரும்பி, நண்பர் த.செங்கல்வராயன் அவர் களுடன் சென்று நேரில் அவருக்கு அழைப்பு விடுத்தேன். அப்போது அவர் என்மீது காட்டிய ஆத்திரத்தையோ, என்மீது பொழிந்த பழிச் சொற்களையோ நான் இங்கு விளக்க விரும்பவில்லை. என்னை ஜஸ்டிஸ் கட்சிக்காரனாகவே முடிவு செய்துகொண்டு, வகுப்புவாத உணர்ச்சி காரண மாகத்தான் வ.உ.சி.க்குக் காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று பழி சுமத்தினார். நல்ல வேளை யாக நண்பர் த.செங்கல்வராயன் அய்யரை சமாதானப் படுத்தினார். என்னைப் பற்றி அவர் கொண்ட தவறான கருத்தைப் போக்க முயன்றார். அதன்பின், வ.உ.சி. சிலைத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்க அய்யர் இணங்கினார். “சிலையைத் திறந்து வைக்க சேலத்திலிருந்து திரு. விஜய ராகவாச்சாரிதான் வரவேண்டுமா?” என்று கேட்டார். நான், அந்தப் பெரியவரை நேரில் சென்று அழைத்து அவரும் இணங்கி விட்டதால், அதிலே மாறுதல் கோர வேண்டாமென்று அய்யரை வேண்டிக்கொண்டேன். எனது வேண்டுகோள் பலிக்காமற் போனதால் சிலையைத் திறக்க திருச்சி திரு. டி.எஸ்.எஸ். இராசனை அழைப்பதென்று முடிவானது.

tmp_2336-voc1-1472549468

பொம்மைக் கலியாணம்:

21.12.39 அன்று இராயப்பேட்டை காங்கிரஸ் மாளிகையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் சிலைத் திறப்பு விழா பொம்மைக் கலியாணம் போன்று நடத்தப் பெற்றது. ஒரு மணி நேரத்தில் விழா முடிக்கப்பட்டுவிட்டது. தமிழர் தலைவர்களெல்லாம் கட்சி வேறுபாடின்றி அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்பி னேன். தமிழ்ப் பெரியார் திரு.வி. கலியாணசுந்தரனார், அப்போது இந்து மகாசபையின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவிருந்த டாக்டர் பி. வரதராசுலு நாயுடு, கம்யூனிஸ்டு தோழர் எம். சிங்காரவேலு செட்டியார், தொழிற் சங்கத் தலைவர் திரு. வி. சக்கரைச் செட்டியார் ஆகிய முதுபெருந்தலைவர் நால்வரையும் நேரில் சந்தித்து விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தேன். என் அழைப்புக்கிணங்கி, அவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். ஆனால், விழாத் தலைவர் அந்தப் பெருந் தலைவர்களுக்கு வ.உ.சி.யை வாயார வாழ்த்திப் பேச வாய்ப்பளிக்கவில்லை. இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்ததென்றாலும்,

அன்றைய சூழ்நிலையில் அதைச் சகித்துக்கொள்வதைத் தவிர எதிர்த்துப் போராட வழியில்லாமலிருந்தது. சேலம் சி. விசயராகவாச்சாரியார், வ.உ.சி. யின் சிறப்பியல்புகளைப் பாராட்டியும், விழாவை வாழ்த்தியும் செய்தி அனுப்பியிருந்தார். நாமக்கல் கவிஞர், யோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர் இந்தச் சிலைத் திறப்பு விழாவுக்கென்றே அனுப்பி யிருந்த கவிதைகளை என் அருமை நண்பர் ஆரியகான கே.எஸ். அனந்தநாராயண ஐய்யர் மிகுந்த உணர்ச்சியோடு பாடினார். பத்திரிகைகள் எல்லாம் விழாவை நிகழ்ச்சியை சிறப்பாகப் பிரசுரித்திருந்தன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை துணைத் தலையங்கம் எழுதி வ.உ.சி.க்கு அஞ்சலி செலுத்தியது. வ.உ.சி.சிலை திறந்த மறுநாள் இராயப்பேட்டை காங்கிரஸ் திடலிலே கதர் சுதேசிப் பொருட்காட்சி ஆரம்ப மானது. நான் ஏற்கனவே கூறியது போன்று அந்தப் பொருட் காட்சியில் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்காட்சிச் சாலையி லிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. தீ விபத்திலே தப்பிய பொருள்களில் வ.உ.சி. சிலையும் ஒன்றாகும். துரதிருஷ்ட மென்னவென்றால், தீயாலும் தீண்டப் படாத வ.உ.சி.சிலையை அந்தத் தீ விபத்துக்குப் பின்னர் யாரோ ஒரு தீயவன் சேதப்படுத்திவிட்டான். அதனால், சிலையைப் பழுது பார்க்க அது இருந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.

எங்கெங்கும் வ.உ.சி:

வ.உ.சி.யின் சிலையை நிறுவ நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மிகவும் சுருக்கமாகத்தான் கூறியிருக்கிறேன். ஆனால், என் ஆற்றலையும் மீறிய ஒரு கடுமையான போராட்டத்தை நான் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால், முழு உருவச் சிலை எடுப்பதென்ற முயற்சி முக உருவச் சிலையாக மாறியது. சிலைத் திறப்பு விழாவை நான் நினைத்தபடி பெரிய அளவில் நடத்த முடியாமற் போய்விட்டது. நிலையைத் திறந்த பின்னரும் என் மனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அது தேசப்படுத்தப் பட்டது. ஆனால், இன்று நாடெங்கும் வ.உ.சி.க்கு எண்ணற்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டிருக்கக் காண்கிறோம். எண்ணற்ற பூங்காக்களும், வீதிகளுக்கும், குடியிருப்புகளுக்கும், பெரிய கட்டிடங்களுக்கும் வ.உ.சி.யின் பெயர் வைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தூத்துக்குடி துறைமுகத்திலும், பாளையங்கோட்டையிலும், சென்னைத் துறைமுகத்திலும், வ.உ.சி.யின் முழு உருவச் சிலைகள் கம்பீரமாகக் காட்சியளிக்கக் காண்கிறோம். இதற்கொல்லாம் காரணம் 1939ல் சென்னை காங்கிரஸ் மாளிகை முன்பு வ.உ.சி.யின் முக உருவச் சிலையை நிறுத்திய பின்னர் அவரது புகழ் பரப்ப நான் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியாகும். 1939ஆம் ஆண்டு நவம்பர் 18ல் முதல் சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராயபுரம் பிரைட்டன் டாக்கீஸில் முதன் முதலாக வ.உ.சி. யின் நினைவு நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்தேன். அவ்விழாவில் இராஜாஜி, திரு. வி.கலியாண சுந்தர னார் ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர். காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்னர் வ.உ.சி. கடைப்பிடித்த அரசியல் காரணமாக இராஜாஜிக்கும் அவரிடம் வெறுப்புதான் என்றாலும், சிறிது சகிப்புத்தன்மை காட்டி, எனது அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், வ.உ.சி. விழாவில் தனது போக்கில் தான் அவர் பேசினார்.

இராஜாஜி சூட்டிய புகழ்மாலை:

அதே இராஜாஜி பிற்காலத்தில் தூத்துக்குடியில் வ.உசி.யின் பெயரால் ஒரு கல்லூரி அமையத் துணைப் புரிந்தார். அத்துடன்றி, 1908ஆம் ஆண்டில் வ.உ.சி. இரண்டு ஆயுள் தண்டனை பெற்றதன் விளைவாக மறைந்துபோன கப்பல் கம்பெனி திரும்பவும் புத்துயிர் பெறவும் உதவி புரிந்தார். அந்தக் கம்பெனியின் முயற்சியால் உருவான ‘வி.ஓ. சிதம்பரம்’ என்ற பெயர் கொண்ட கப்பலை 9.2.1949ல் தூத்துக்குடி கடலிலே மிதக்கவிட்டார். ஆம்; இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் என்ற பெருமைக்குரிய நிலையில் இருந்து கொண்டு! அப்போது அவர் மிகுந்த உணர்ச்சியுடன் வ.உ.சி.க்கு அஞ்சலி செலுத்தி நிகழ்த்திய சொற்பொழிவை இங்கு பார்ப்போம்: “தமிழ்மக்களுக்கு அலைகடல் தாண்டுதல் புதிதன்று. நம் நாட்டு மக்கள் இந்தத் தொழிலில் மேனாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். கடலில் மற்ற நாட்டினருக்குள்ள உறவும் உரிமையும் நமக்கும் உண்டு. “நமது அன்பிற்குரிய சிதம்பரனாரின் கனவுகள் நம்முடைய காலத்தில் நிறைவேறு மென்பதில் ஐயமில்லை. “சிதம்பரம் பிள்ளையிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. சிலநாள் சேலத்தில் என் குடிசையிலும் தங்கியிருந்தார். இன்று நாம் தொடங்கும் இச்செயலுக்கு அந்த ஆத்மாவின் ஆசியைப் பெறுவோமாக. “இந்தக் கப்பலுக்கு அவருடைய திருநாமம் தந்து ஓட்டப் போகிறோம். சிதம்பரம்பிள்ளை, ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரிப்பது, இந்த விழா வையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நிகழ்ச்சி அவருக்குக் கொஞ்சம் வேடிக்கையாகவு மிருக்கும். “காரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங் கத்தின் ஆதரவுடனும் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன். “ஹார்வி கம்பெனியாரும், காரல் மில்ஸ் பஞ்சா லையைச் சார்ந்தவர்களும், பி.ஐ.எஸ். என் கம்பெனியை நடத்தியவர்களும் அந்த நாளில் சிதம்பரம் பிள்ளையை ஒரு பயங்கரமான எதிரியாகக் கருதினார்கள். ஆண்ட்ரூ ஹார்வியும், சாப்ரமனும் ராஜத் துவேஷக் குற்றம் சாட்டினார்கள். பின்ஹே துரையைக் கொண்டு விசாரனை நடத்தி இரண்டாண்டு ஆயுள் தண்டனை விதிக்கச் செய்தார்கள். இந்தத் தீர்ப்பைக் கண்டு இந்தியா முழுவதும் வருத்தமும் வியப்பும் மனக் கசப்பும் பரவின. ஆத்திரம் பொங்கியது. உயர்நீதி மன்றத்தார், ஆயுள் தண்டனையை ஏதோ நியாயம் கண்டு ஆறு வருடச் சிறைத் தண்டனையாகக் குறைத்தார்கள். அநீதிக்குச் சிறிது பரிகாரம் ஏற்பட்டது. “இந்தத் தூத்துக்குடி மக்களை “வந்தேமாதரம்” என்று சொல்லச் செய்தாரென்பது சிதம்பரம் பிள்ளை பேரில் குற்றம். சுப்பிரமணிய சிவா பேசிய கூட்டங்களுக்குச் சென்று, ‘இந்தியா விடுதலை பெறவேண்டும்’ என்று சிவம் கூறியதை சிதம்பரம் பிள்ளையும் ஒப்புக்கொண்டாரென்பது இன்னொரு குற்றம். இந்தக் குற்றங்களுக்காகத்தான் சிதம்பரம் பிள்ளை தண்டனை அடைந்தார். “இது, நாற்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. சிதம்பரம் பிள்ளையைத் தண்டித்த பின்ஹேயை ஹைக்கோர்ட் நீதிபதியாக உயர்த்த வேண்டுமென்று ஒரு யோசனை ஏற் பட்டது. அதை அங்கீகரிக்க அப்போது இந்தியா மந்திரியாக இருந்த லார்டு மார்லி மறுத்துவிட்டார். மார்லி, தம்முடைய ‘ஞாபகங்கள்’ என்ற நூலில் இது விஷயமாக எழுதி யிருப்பதைப் படித்தால் சுவையாக இருக்கும். “நாற்பதாண்டுகளில் காலச் சக்கரம் ஒரு பெரிய சுற்றுச் சுற்றிவிட்டது. சிதம்பரம் பிள்ளை எதற்காகச் சிறை சென்று, இன்னல் பட்டாரோ அது நிறைவேறிவிட்டது. நம் நாடு முழு விடுதலையைப் பெற்றுவிட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன். பி.ஐ.எஸ். என். கம்பெனியார் தங்களுடைய கப்பலை நிறுத்திக்கொண்டு, சிதம்பரம் பிள்ளையின் பெயர் பூண்ட இந்தக் கப்பல் செல்வதற்கு இடமளித்திருக்கிறார்கள். “தூத்துக்குடிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இப்போது பரிகாரம் கிடைத்துவிட்டது. கப்பலுக்கு சிதம்பரம் பிள்ளை யவர்களின் பெயரை வைத்து மிதக்கவிடுகிறேன். மாவீரரான சிதம்பரம் பிள்ளையின் திருநாமத்தை இந்தக் கப்பலுக்குச் சூட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் கப்பல் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு கடலில் செல்லும். “இந்தியக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம் பிக்கும் முயற்சி முதன் முதலில் இந்தத் தூத்துக்குடியில்தான் ஆரம்பித்தது. அதற்கு சிதம்பரம்பிள்ளையின் பலிதானமே ஆரம்பர வேள்வியாக 1908ஆம் ஆண்டில் அமைந்தது. அவீதா எண்ணித் தமிழர்கள் பெருமிதம் கொள்ளலாம்.”

ம.பொ.சி.இல்லாமலா, வ.உ.சி.க்கு விழா!:

இராஜாஜியின் இந்தப் பேச்சு வ.உ.சி. விஷயத்தில் காங்கிரஸ் வட்டாரத்தின் முன்னணித் தலைவர்களிடையில் ஏற்பட்ட மகத்தான மனமாற்றத்தைக் குறிப்பதாகும். இந்த மனமாற்றத்தின் விளைவுகளே இன்று தமிழ் நாடெங்கும் எண்ணற்ற இடங்களில் அமைந்துள்ள வ.உ.சி.யின் நினைவுச் சின்னங்கள் இந்த நிலை ஏற்படுவதற்கு நான் எத்தனையோ ஆண்டுகள் முழுமூச்சுடன் பாடுபட்டேன். என் சொந்தப் புகழ் வளர்த்துக் கொள்ளும் நினைவின்றியே வ.உ.சியின் புகழ் வளர்க்கப் பாடுபட்டேன். அவரது புகழ் வளர்ந்தால், தமிழினத்தின் புகழ் எட்டுத் திக்கிலும் மணக்குமென்று நான் எண்ணினேன். வியப்பென்னவென்றால், வ.உ.சி.யின் புகழ் பரப்ப இப்படி எல்லாம் பாடுபட்ட எனக்கு தூத்துக்குடியில் நடந்த ‘வி.ஓ.சிதம்பரம்’ கப்பலை மிதக்கவிடும் விழாவுக்கு அழைப்பு வராததாகும். அந்த விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஜெனரல் இராஜாஜி, கிண்டி ராஜபவனத்துக்கு என்னை அழைத்து, “தூத்துக்குடி விழாவுக்கு நீங்கள் ஏன் வரவில்லை?” அத்துடன், “நீங்கள் இல்லாமலா சிதம்பரம் பிள்ளைக்கு விழா?” என்றும் சொன்னார். என்பால் தமக்குள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில், “தூத்துக் குடியில் விழா அரங்கில் என் கண்கள் எட்டுத் திசையும் சுழன்று உங்களைத் தேடின” என்றும் மனமுருகக் கூறினார். “எனக்கு அழைப்பு வரவில்லை” என்றேன். அவர் மனம் நொந்தவராகி, தமது முகத்தைச் சுளித்துக் கொண்டு, “நம்முடைய ஜனங்களே இப்படித்தான். யாரை மதிக்க வேண்டுமோ அவரை மறந்து விடுவார்கள்” என்றார். “என்னுடைனேயே (கவர்னர் ஜெனர லுக்குரிய ஸ்பெஷல் ரயிலிலேயே) நீங்கள் வந்திருக்கலாமே?” என்றும் கூறினார். தூத்துக்குடி விழாவில் நான் கலந்து கொள்ள விழாக் குழுவினர் வாய்ப்பளிக்காததில் எனக்கு மிகவும் வருத்தந்தான். ஆனால், இராஜாஜியின் அனுதாப வார்த்தைகள் என் மனத்துக்கு ஆறுதலளித்தன.

வ.உ.சி. கல்லூரி:

சென்னை காங்கிரஸ் மாளிகை 21.12.1939ல் வ.உசி.யின் சிலை நிறுவியதற்கும் 9.2.1949ல் கவர்னர் ஜெனரல் இராஜாஜி தூத்துக்குடி கடலில் வி.ஓ. சிதம்பரம் கப்பலை மிதக்க விட்ட தற்கும் இடையிலுள்ள பத்தாண்டு காலத்திலே வ.உ.சி. புகழ் பரப்ப அரும்பாடுபட்டேன். அந்தக் கால கட்டத்திலே நான் பேசிய கூட்டந்தோறும் வ.உ.சி.யின் வீர வரலாற்றைக் கூறுவதனைக் கடமையாகக் கொண்டிருந்தேன். வடாற்காடு செய்யாறில் இராஜாஜியின் தலைமையில் நடந்த ஒரு காங்கிரஸ் மாநாட்டிலே நான் நிகழ்த்திய சொற்பொழி விலிருந்து பிறந்ததுதான் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி. ஆம்; அந்த மாநாட்டிலே வ.உ.சி. பற்றி நான் நிகழ்த்திய சொற் பொழிவுக்குப் பின் அங்கு திரட்டப்பட்ட நிதியை ஆரம்ப மாகக் கொண்டுதான் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிதிக்குழு அமைந்தது. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் வ.உ.சி. யின் வீர வரலாற்றை நூலாக்கி மக்கள் மத்தியிலே பரப்பியதோடு, பள்ளியிலே படிக்கும் மாணவர்களுக்கும் அதனைப் பாடமாக வைக்கச் செய்தேன். ‘தமிழ்ப் பண்ணை’யைக் கொண்டு வ.உ.சி.யின் திருவுருவப் படத்தை ஆயிரக் கணக்கில் வெளி யிடச் செய்தேன். நான் காங்கிரஸ் பிரசாரத்திற்குச் சென்ற ஊர்தோறும் வ.உ.சி.யின் பெயரால் மன்றங்கள் அமைக்குமாறு இளைஞர்
களைத் தூண்டினேன். அதனால், நாடெங்கும் வ.உ.சி. மன்றங்கள் அமைந்தன.

This entry was posted in வ. உ. சி புகழ். Bookmark the permalink.

உங்கள் கருத்து

உங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *

four × 1 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>